திருமண மோதிரம் எப்படி தோன்றியது

தமிழர் கலாச்சாரத்தில் திருமணத்தின் அடையாளமாக தாலி அணியும் வழக்கம் இருந்திருக்கிறது. தாலி என்ற சொல் எப்படித் தோன்றியது பற்றிய ஆய்வுகள் எராளம். பனை மரத்தின் மறு பெயர்களாகத் தாளி, தாலம், பெண்ணை என்பன இடம் பெறுகின்றன.

பனை ஓலையின் ஒரு நறுக்குத் துண்டில் இவள் இவனின் மனைவி என்று எழதிப் பலபேர் முன்னிலையில் அவள் கழுத்தில் அவன் கட்டிவிடுவான். இது தான் தாலி கட்டும் வழமையின் தொடக்கம் என்கிறார்கள். மிகவும் சுருக்கமாக அன்று நடந்த சடங்கு இன்று விரிவடைந்து பாரிய சமூக பொருளாதார நிகழ்ச்சியாகி விட்டது.
திருமணத்தின் குறியீடாகவுள்ள கை விரலில் அணியும் மோதிரம் பண்டைய எகிப்து நாகரிகத்தில் இருந்து தோன்றியது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர், மேற்கு நாடுகளின் திருமணச் சடங்குகளில் முக்கிய பாத்திரம் வகிக்கும் மோதிரம் கிழக்கு நாடுகளின் திருமணச் சடங்குகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
திருமணச் சடங்கில் மோதிரம் மாற்றும் வரலாறைப் பைபிள் நூலில் பார்க்கலாம். எகிப்தில் முதன் முதலாக வடிவமைக்கப்பட்ட திருமண மோதிரங்கள் பப்பைரஸ் (PAPYRUS ) என்ற ஒரு வகை தாவரத்தின் நீளமான இலை, நாணல் புல் ஆகியவற்றைத் திரட்டிச் செய்யப்பட்டன.
மோதிரங்கள் முடிவில்லாத வளையங்கள் என்பது எகிப்தியர்களின் கோட்பாடு. இந்தக் காரணத்திற்காக அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
திருமண பந்தம் முடிவில்லாமல் தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கப் பட்டது. இடது கை விரலில் அணியும் வழக்கத்தை அவர்கள் தொடங்கினார்கள்.மோதிரம் அணியும் விரல் காதல் விரல் (LOVE FINGER ) என்று அழைக்கும் வழக்கம் இன்று உண்டு. இதயத்தோடு நேரடித் தொடர்புடைய விரல் என்றும் அது சிறப்பிக்கப் படுகிறது.இடது கையின் சின்ன விரலுக்குப் பக்கத்தில் உள்ள விரல் தான் மோதிர விரல் என்று சொல்லப்படுகிறது.
கி. மு. 332ல் மகா அலெச்சாந்தர் எகிப்தைக் கைப்பற்றினார். அதன்பின் மோதிரம் அணியும் வழக்கம் எகிப்தில் இருந்து கிரேக்கத்திற்குச் சென்றது. கிரேக்கத்திலிருந்து இந்த வழக்கம் ரோம சாம்ராச்சியத்திற்குச் சென்றது. பண்டைய ரோமாபுரியில் திருமண மோதிரங்கள் இரும்பில் செய்யப்பட்டன.
17ம் நூற்றாண்டில் ரோமாபுரியில் இருந்து இத்தாலி, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு மோதிரம் அணியும் வழக்கம் பரவியது. திருமணங்களில் முக்கிய மையப் பங்கு வகிக்கும் மோதிரம் தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்த பொருள்களை இழைத்துச் செய்யப்படுகின்றன.
இரும்பு மோதிரங்களுக்குப் பிறகு வெள்ளி மோதிரங்களின் காலம் நிலவியது. அதன் பின் தங்கத்தின் யுகம் தோன்றி இன்று வரை நிலவுகிறது. திருமண மோதிரம் அணிவிப்பதையும் அதை ஏற்றுக் கொள்வதையும் சட்டபூர்வத் திருமணமாகப் பல மேற்கு நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.இன்று கிழக்கு நாடுகளில் மோதிரம் மாற்றும் வழக்கம் திருமணத்தின் போது இருக்கிறது.விவாகரத்தின் போது மனைவிக்கு அணிவித்த மோதிரத்தை ஆண்கேட்கும் உரிமை சட்டத்தில் இல்லை. அது போல் எமது நாட்டில் தாலிக் கொடியைத் திருப்பிக் கேட்கும் உரிமை சட்டபூர்வமாக இல்லை.

Posted

in

by

Tags: