, ,

இந்தியாவில் 200வது டெஸ்ட் போட்டியை விளையாடுவாரா சச்சின்?

சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் தனது 200-வது டெஸ்ட் போட்டியை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐயின் செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இதனால், மைல் கல்லாகக் கருதப்படும் தனது 200-வது டெஸ்ட் போட்டியை சச்சின் இந்தியாவில் விளையாடுவது சாத்தியமாகியுள்ளது.

Sachin Tendulkar 012

ஒருநாள் போட்டிகளிலிருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்று விட்ட சச்சின், டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

அவர், 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதனால், மேலும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால், 200-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார்.

200-வது டெஸ்டில் விளையாடிய பின் டெஸ்டிலிருந்தும் அவர் ஓய்வு பெறுவார் என்று பரவலாகக் கூறப்பட்டு வருகிறது. ஒருவேளை இது உண்மையானால், சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையிலேயே அவர் ஓய்வு பெறுவார். இது அவருக்கு மேலும் சிறப்பாகும்.

முன்னதாக, வரும் டிசம்பர் மாதம் இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது அதற்கு முன்னதாகவே மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்தியா சுற்றுப்பயணம் செய்து விளையாட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இத்தொடரில் விளையாட ஆர்வமாக இருப்பதாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் இமெயில் மூலம் தெரிவித்துள்ளது. இதனால், தனது சாதனைப் பட்டியலில் 200 டெஸ்ட் சாதனையை சச்சின் விரைவில் இடம்பெறச் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.