in , ,

பணத்தை செலவிடத் தெரியாத பரிதாபத்திற்குரிய தென்னாசியத் தலைவர்கள்.

ஊழல் பணத்தை வாரிப்போடும் பரிதபங்களின் அவல வாழ்வு…

மகிந்தராஜபக்ஷ குடும்பம் 1500 கோடி ருபாவை அலரி மாளிகையில் மறந்துபோய் விட்டுச் சென்றுள்ளார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

மறந்த தொகை 1500 கோடி என்றால் அவர்கள் தேடிய தொகை எவ்வளவு நினைக்க தலை சுற்றுகிறது.

மகிந்தராஜபக்ஷ படம் பொறித்த 7000 கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டதாக இன்னொரு செய்தி தெரிவிக்கின்றது, ஆடம்பரக் கார்கள், மாளிகைகள் என்று சொத்துப் பட்டியல் நீண்டு செல்கிறது.

ராஜபக்ஷ சகோதரர்கள் கொள்ளை கொள்ளையாக அடித்த பணம் ஒரு நாட்டையே வளைத்து வறுகி எடுக்குமளவுக்கு போயுள்ளதாக கதைகதையாக வந்து கொண்டிருக்கின்றன.

இதற்கு சில காலத்திற்கு முன்னர் 2 ஜி அலைக்கற்றை ஊழலில் 2500 கோடிகளை ஊழல்பண்ணியதாக மு.கருணாநிதியின் மகள், மற்றும் அமைச்சர் ராஜா மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

அதற்குப் பின் புரட்சித்தலைவி ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சேர்த்த சொத்துக்கள், வளைத்துப்போட்ட நிலங்கள், சுதாகரன் திருமணத்தில் அவர் அணிந்து வந்த நகைகள் யாவும் மு.கருணாநிதி குடும்பத்துக்கு கடுகளவும் குறைந்தாக இருக்கவில்லை.

அன்றொரு நாள் திருச்சியில் இருந்து டிக்கட் இல்லாமல் திருட்டுத்தனமாக சென்னை வந்த மு.கருணாநிதியின் குடும்பம் உலகத்தின் நூறு பெரிய பணக்காரர் குடும்பத்தில் இடம் பிடித்தது எப்படியென்று ஜெயலலிதா கேட்டிருந்தார்.

மறுபுறம் எம்.ஜி.ஆர் தமிழ் மக்களின் விருப்புக்குரியவர்தான், கொடை வள்ளல்தான், ஆனால் இறக்கும் காலத்தில் பணத்தை செலவு செய்யத் தெரியாமல் நாலு பீரோ நிறைய பணக்கட்டுக்களை ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்ததாக கூறியிருந்தது இன்னொரு செய்தியில் வந்தது.

போபோஸ் ஊழல் முதல் ஹெலிகாப்டர் ஊழல்வரை இந்திரா காந்தி குடும்பம் வாரிப்போட்ட பணம் மனித வாழ்வில் எண்ணி முடிக்க முடியாத தொகை..

பாகிஸ்தானில் சொத்தை வாரி இறைத்த தலைவர்கள் கதை யகியாகான், ஆயுப்கான், இம்ரான்கான் காலம்வரை நீண்டு செல்கிறது..

புலிகளின் பணம், நகைகள் என்று சிங்கள அரசு கொள்ளையிட்டது தொன் கணக்கிலான தங்கம் என்று இப்போது சிங்களச் செய்திகள் கூறுகின்றன.

இவற்றையெல்லாம் தொகுத்துப்பார்த்தால் தென்னாசியாவின் தலைவர்களின் மிகப்பெரிய துயரம் பணத்தை செலவிடத் தெரியாமையே என்பதை நாம் தெட்டத் தெளிவாக விளங்கிச் கொள்ள முடியும்.

உலகின் மிகப்பெரிய துயரம் பட்டினியில் மடிவதல்ல சேர்த்த பணத்தை தின்ன முடியாமல் மடிவதுதான்.

இது தென்னாசியாவில் மட்டுமல்ல எகிப்திய சர்வாதிகாரி முஸாரப் சுருட்டிய செல்வம் டென்மார்க் என்ற நாட்டின் வருடாந்த பட்ஜட்டைவிட அதிகம், கொல்லப்பட்ட கடாபியின் சொத்துக்கள் அதைவிடப் பெரிது, அவருக்கு பிறந்த நாள் பரிசாக முன்னாள் இத்தாலிய பிரதமர் பலர்ஸ்கோனி ஓர் இன்ரசிற்றி ஐ.சி.4 ரயில்வண்டியையே பரிசு கொடுத்திருந்தார்.

உலகத் தலைவர்களில் பலர் மிகப்பெரும் மூடர்களே என்பதை அவர்களுடைய செலவிட முடியாத செல்வமே அடையாளம் காட்டும்.

நேற்று வெளியான ஒக்ஸ்பாம் ஆய்வானது உலகம் முழுவதும் உள்ள செல்வத்தில் மூன்றில் இரண்டு பகுதி எண்பது தனி நபர்களிடம் குவிந்திருப்பதாகவும், 3.5 பில்லியன் மக்கள் அடுத்த நேர சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருப்பதாகவும் கூறுகிறது.

எத்தனையோ ஆதாரங்கள் கைகளில் இருந்தும்…

இந்தத் தலைவர்கள் உண்மையாக அறிவுள்ள தலைவர்களா என்று சிந்திக்கத் தவறிவிடுகிறார்கள் மக்கள், ஆகவே தலைவர்கள் குற்றவாளி என்பது போல அவர்களை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளும் ஆதரவாளரும் குற்றவாளிகளே.

தங்கள் சொத்தை சரியான வழியில் செலவிடத் தெரியாத மூடத் தலைவர்கள் எப்படி நாட்டின் செல்வத்தை சரிவர பயன்படுத்துவார்கள்..? மக்களுக்கும் இந்த உண்மை தெரியாதென்பதை அவர்கள் போடும் வாக்குச் சீட்டுக்களால் உணரலாம்.

தமக்கு சரியான வழியில் பணத்தை செலவிடத் தெரியாத, அதேவேளை பணத்தை சேகரிப்பது கடினமான செயல் என்று நினைக்கும் மக்களில் இருந்துதான் இந்த அறிவு கெட்ட தலைவர்கள் உருவெடுத்து வருகிறார்கள்.

பணத்தை சேகரிப்பதைவிட அதைச் செலவு செய்வது மிக மிகக் கடினமான செயலாகும், மகிந்த ராஜபக்ஷ குடும்பம் சேகரித்திருக்கும் பணம்தான் அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியது.

ஐ.நாவை அபாயமானதென கருதிய அவர் பணத்தை செலவு செய்யத் தெரியாத தன்னுடைய பணமே தனது ஆட்சிக்கு எமன் என்பதை தெரியாது வாழ்ந்தார்.

மகிந்த ராஜபக்ஷவோ, கோத்தபாய ராஜபக்ஷவோ அல்லது அவர்களுடைய குடும்பத்தினரோ உண்மையான அறிவுடையவர்களாக இருந்திருந்தால் அவர்கள் குறுங்காலத்தில் இந்த வீழ்ச்சியை சந்தித்திருக்க மாட்டார்கள்.

அவர்கள் எந்த வழியிலாவது பணத்தை சேகரிக்கத் தெரிந்தவர்கள் ஆனால் பாவம் அதைச் சரியாக செலவிடத் தெரியாதவர்கள்.

உண்மையில் சரியான வழியில் சேகரிக்கப்படாத பணத்தை சரியான வழியில் செலவு செய்ய முடியாது என்பது மிகப்பெரிய தத்துவமாகும், இது பணம் வராதவரை விளங்க முடியாத தத்துவமாகும்.

இது குறித்து ஆங்கில எழுத்தாளர் ஜோர்ஜ் பார் மக் சற்சொன் ஒரு நாவலை எழுதியுள்ளார், அந்த நாவல் 1985ம் ஆண்டு பிறீவ்ஸ்டர்ஸ் மில்லியன்ஸ் என்ற ஆங்கிலத் திரைப்படமாக வந்தது.

இந்தப் படத்தில் செலவு செய்வதில் உள்ள சிரமத்தை அழகுபட விளங்கப்படுத்தியிருந்தார்கள், அது மகிந்தராஜபக்ஷ குடும்பத்தில் இருந்து சாதாரண புலம் பெயர் நாடுகளில் பணத்தை குவிக்கும் தமிழர்கள் வரை பலருக்கு அறிவுரை சொல்லும் திரைப்படம்.

அந்த ஆங்கிலப்படத்தில் சாதாரண விளையாட்டு வீரன் ஒருவனுக்கு மூன்று மில்லியன் டாலர்களை கொடுக்கும் ஒருவர் அதை ஒரு மாத காலத்தில் செலவழித்துக் காட்ட வேண்டும் என்று கூறுகிறார்.

அப்படி சரியாக செலவு செய்து காட்டினால் பரிசாக 3000 மில்லியன் டாலர்கள் அவனுக்குக் கிடைக்கும்.

ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உண்டு, ஒன்று அவர் பணத்தை செலவிடும்போது அதை வீம்புக்கு செலவிடக்கூடாது, மற்றவர்கள் அவரது செலவை பைத்தியக்காரத் தனமாகக் கருதக்கூடாது, அர்த்தமான முறையில் செலவிட வேண்டும், ஒவ்வொரு செலவையும் ஒரு குழு கண்காணிக்கும்.

mahintha money

இது ஒரு வேலையா இதோ பார் என்று பணத்தை அள்ளி செலவிட ஆரம்பிக்கும் அவனுக்கு செலவு செய்ய முயன்றபோதுதான் பணத்தைத் தேடுவதைவிட அதை பயனுள்ள வகையில் செலவு செய்வது எவ்வளவு பெரிய கடினமான வேலை என்பதை உணர்கிறான்.

மகிந்த ராஜபக்ஷ குடும்பம் இந்தப் படத்தை பார்த்திருந்தாலாவது தமக்குள்ள ஆபத்தை உணர்ந்திருக்கும்.

இதே கதையை அப்படியே உல்டா பண்ணி ரஜினிகாந்த் நடிக்க எடுக்கப்பட்ட படம்தான் 1997 ம் ஆண்டு வெளியான அருணாசலம், இந்தப் படத்திலும் இதுபோன்ற ஒரு சோதனையை எதிர் கொள்கிறார் ரஜினி காந்த்.

அந்தத் திரைப்படத்தின் பெரிய வில்லனே.. செலவிடுவதில் இருக்கும் கஷ்டம்தான்..

கையில் மட்டும் காசிருந்தால் அதற்கு நீதான் ராஜா கழுத்துவரை காசு வந்தால் உனக்கு அதுதான் ராஜா என்ற கருத்தில் ரஜினி பாடல் ஒன்றும் வரும்.

கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன் – கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன் என்று ஒருவன் ஒருவன் முதலாளி என்ற ரஜினி பாடல் புத்தி சொல்லும்.

ஜோதிடரும், திருப்பதி வெங்கடாஜலபதியும் வழிகாட்ட, சுய அறிவின்றி வாழ்ந்த தலைவரை நம்பி ஒரு நாட்டின் மக்கள் வாழ வேண்டிய அவலம் வந்தது.

பணத்தை தேடிவிட்டு செலவழிக்கத் தெரியாது திருப்பதி உண்டியலில் மூட்டை மூட்டையாக வீசுவோர் கதை போதாதென்று.. மகிந்தவும் திருப்பதி போனார்.

சோதிடர் ஒருவரை நம்பி தேர்தலில் குதித்தார் மகிந்த ராஜபக்ஷ என்ற செய்தியும், திருப்பதி சென்றால் தேர்தலில் வெற்றி பெறலாம் என்றும் அவர் திருப்பதி போன கதையும் அவரை வழி நடத்தியது பணம்தான் என்பதைக் காட்டுகின்றன.

பணத்தை குவித்து வைத்திருக்கும் தலைவர்களுக்கெல்லாம் ஒரு கட்டத்தில் இயல்பாகவே வாழ்க்கை அச்சமாகிவிடும், பதவியை காப்பாற்றுவதைவிட பணத்தை காப்பாற்றுவதே பெரும் பிரச்சனையாக மாறிவிடும்.

கடவுள் இல்லையென்று பேசி ஆட்சிக்கு வந்த தி.மு.க அதிமுக கட்சிகள் கடவுளின் காலடியில் விழுந்து, பெரியார் கொள்கையை காற்றில் விட்டு, கலைஞர் மனைவி தயாளு அம்மாள் சத்தியசாயிபாபா காலில் விழுமளவுக்கு தி.மு.க போனதே எதனால்.. அளவுக்கு மீறிய பணம் அவர்களின் பகுத்தறிவை பறித்தெடுத்தது.

கறுப்புச் சால்வையை வீசி காவிச்சால்வை போட்டார் கலைஞர்.. அவரை போட வைத்தது அறிவல்ல அளவுக்கு மிஞ்சிய பணம்.

அறிவு குன்றிய கலைஞர், ஜெயலலிதா போலவே சொத்து இருந்தால் வாழ்க்கையில் எல்லாமே செய்துவிடலாம் என்று கருதி தப்பான வழியில் சொத்தை தேடிய மகிந்த ராஜபக்ஷ குடும்பம் புலிகளை எதிரியாகக் கருதியது, ஆனால் புலிகளை விட தமக்கு பெரிய எதிரி தாம் சேகரித்த சொத்துத்தான் என்பதைக் காலதாமதமாகவே கண்டு கொண்டனர்.

ராஜபக்ஷவின் மகன் ஆடிய நாடகங்கள் அவர்களுடைய குடும்பம் சேகரித்த சொத்தை எப்படிச் செலவு செய்வதென்று தெரியாமல் தடுமாறியதற்கு நல்ல உதாரணம்.

அசினை கொண்டு வந்ததும், பின் சல்மான்கானை தேர்தலுக்குக் கொண்டு வந்ததும் அவர்களுடைய அறிவல்ல பணம்தான்.

அன்று வன்னியில் இருந்து சாதாரண பொது மக்களின் சொத்துக்கள் முதல் வீடுகளின் கதவுகள் சன்னல்களைக் கூட பிடுங்கிச் சென்ற ராஜபக்ஷ குடும்பம் பதுக்கிய சொத்துக்களை இப்போது புதிய அரசு மீட்டுக்கொண்டிருக்கிறது.

சிங்கள இனமும் தமிழ், முஸ்லீம் இனங்களும் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய சொத்தை சேகரித்திருக்கிறார்களே என்று ஆச்சரியத்தில் கிடக்கின்றன.

தேயிலைத் தோட்டங்களில் புறாக்கூட்டு லயங்களில் கிடக்கும் தோட்டத் தொழிலாளரின் இரத்தம் இப்படி மூடத்தனங்களில் இறைக்கப்பட்டுள்ளது.

இப்போது வெளி வந்திருக்கும் மகிந்த ராஜபக்ஷ சொத்துக்கள் மிகவும் சொற்பம் இனிமேல்தான் அதிசயங்கள் வெளிவரப்போவதும் தெரிகிறது.

பாடுபட்டு பணத்தைச் சேர்த்து பதுக்கி வைப்போரையே கேடு கெட்ட மாந்தர் என்று பழைய பாடல் தமிழ்ப் பாடல் ஒன்று கூறுகிறது.

இந்தக் கேடுகெட்ட மனிதர்களே தென்னாசியாவை வழி நடத்தும் பெரும்பான்மை அரசியல் தலைவர்கள், நடிகர்கள், சாமியார்கள், மதத் தலைவர்கள் என்பது எத்தனை பெரிய துயரம், அவலம்.

உண்மையில் மனிதர்களில் தலைவர்களாக இருக்கக் கூடிய தகுதி இருப்பவர்கள் யார்.. படித்தவர்களா, இல்லை பணக்காரர்களா, இல்லை நல்லவர்களா.. என்று கேட்டால்..

தேடிவைத்த பணத்தை எப்படி பங்கிடுவது என்று தெரியாதவர்கள் ஆட்சிக்கட்டிலில் அமரக்கூடாது என்பதுதான் தலைமை விதியாகும்.

தமிழ் மக்களின் வாழ்க்கையை எடுத்துப் பார்த்தால் அவர்களிலும் அதிகமானவர் பணத்தை மாங்கு மாங்கென தேடும் கூட்டமாகவும், அதைச் செலவழிக்கத் தெரியாத வர்க்கமாகவும் இருந்த காரணத்தினாலேயே காலத்திற்குக் காலம் யூலைக் கலவரங்களை சந்தித்து சிங்கள இனவாதிகளிடம் சொத்துக்களை பறி கொடுத்து மடிந்துள்ளார்கள் தமிழர்கள்.

ஓர் இனம் சிறந்த இனமாக கருதப்பட வேண்டுமானால் அந்த இனம் சரியான முறையில் சரியான விடயங்களுக்கு செலவு செய்யத் தெரிந்த இனமாக இருக்க வேண்டும்.

தமிழ் சமுதாயம் மட்டுமல்ல சிங்களச் சமுதாயமும் செலவு செய்யத் தெரியாத சமுதாயமாக இருக்கிறது என்பதற்கு அவர்களில் இருந்து வெளியான மகிந்தராஜபக்ஷ போன்ற தலைவர்களே நல்ல உதாரணம்.

எந்தவிதமான எதிர்கால திட்டமும் இல்லாமல் பணத்தை சேகரித்தாலே போதுமென்ற மகிந்த ராஜபக்ஷ குடும்பத்திற்கு எல்லாம் இருந்தும் இனப்பிரச்சனையை தீர்க்கத் தெரியவில்லை.

எகிப்திய முபாரக், லிபிய கடாபி போன்றவர்கள் பணத்தை தேடியவர்களே அல்லாது தேடிய பணத்தால் வாழ்வை காப்பாற்ற முடியாதவர்களாக மாறினார்கள்.

ஜெயலலிதா தேடிய பணத்தால் ஆட்சியை இழந்து சிறையில் கிடந்தார்.

நோயினால் பாதிக்கப்பட்டு தேடிய பணத்தில் இரண்டு இட்லி தின்ன முடியாத நிலைக்குப் போனது எம்.ஜி.ஆரின் கடைசிக்கால வாழ்வு, அந்த நேரம் வந்த அவருடைய பிறந்த நாளுக்கு பணத்தை செலவிடத் தெரியாத அவர் மனைவி ஜானகி அவருக்கு நூறு பவுணில் தங்கச்சங்கிலி போட்ட போது அவர் பேசும் சக்தியை இழந்திருந்தார்.

இதையெல்லாம் பார்த்து..

வெறும் கம்பங்களி தின்றவனும் மண்ணுக்குள்ளே.. தங்க பஸ்ப்பம் தின்றவனும் மண்ணுக்குள்ளே என்று பாடி அன்று தங்க பஸ்ப்பம் தின்றும் உடம்மைக் காப்பாற்ற முடியாது மண்ணுக்குள் போன எம்.ஜி.ஆரை நினைவு படுத்தினார் படையப்பாவில் ரஜினிகாந்த்.

அதன் பின் அவரையும் சுனாமி போல இழுத்துச் சென்றது அவர் தேடிய பணம்தான்..

இன்று அவரே இரண்டு சிறு நீரகங்களும் பழுதான நிலையில் இரவல் சிறு நீரகத்துடன் இன்னும் சில கோடிகளை சேர்க்க லிங்கா படத்தில் நடித்தார், இன்னும் துடிக்கிறார்.

தேடிய பணத்தை செலவழித்து முடிக்க அவருடைய ஆயுள் போதாது.. இது தெரியாமல் இமயமலைக்குப் போகிறார்..

திரைப்படத்தில் சொத்துக்களை மக்களுக்கு எழுதி வைக்கும் நமது தலைவர் நிஜத்தில் எழுதி வைப்பதில்லை படம் நடித்து மக்கள் சொத்தை தனது மடியில் போடுகிறார் என்று ரசிகர் ஒருவர் அவரைக் கேலி செய்திருந்தார்.

தங்கத்தை பூட்டி வைத்தாய், வைரத்தை பூட்டி வைத்தாய்.. உயிரை பூட்டி வைக்க எது பூட்டு என்று பாடி நடித்த ரஜினிக்கும் அவர் தேடிய பணமே இன்று எதிரியாக மாறியிருக்கிறது.

இப்படி தென்னாசியாவை அலைக்கழிக்கிறது அறியாமை..

இன்று மகிந்த ராஜபக்ஷ குடும்பத்திற்கும் போர்க்குற்றத்தைவிட பெரும் எதிரியாக மாறியிருப்பது அவர்கள் சேகரித்து வைத்துள்ள செலவழிக்கத் தெரியாத சொத்துக்கள் தான்.

செல்வத்தை சேகரித்து அதை பயன்படுத்தத் தெரியாது முடியும் மூடர்களின் பட்டியலில் இடம் பெறும் மகிந்த ராஜபக்ஷவும் சகோதரரும் நவீன துட்டகைமுனுக்கள் என்று புகழப்பட்டார்கள்..

இவர்களுடன் ஒப்பிட்டால் அநாதைப் பிணமாக அனுராதபுரத்தில் விழுந்து கிடந்தாலும் செல்வத்தை சரியான வழியில் செலவிட்ட எல்லாள மன்னன் பாராட்டப்பட வேண்டியவனே.

மகிந்த ராஜபக்ஷ பணத்துக்காக வன்னி ஆட்சியை அழித்தார் இன்று அதே பணமே அவருடைய ஆட்சியை அழித்திருக்கிறது.

தவறான வழியில் விரைவாக பணத்தைத் தேடும் செலவு செய்யத் தெரியாத தென்னாசிய தலைவர்கள்..

தவறான பாதையில் விரைவாக செல்வதால் பயனெதுவும் இல்லை என்ற பழமொழியின் உண்மையை காலதாமதமாகவே உணர்கிறார்கள்.

மகிந்த ராஜபக்ஷவுக்கு 2012ல் ரஸ்யாவில் உள்ள லுமும்பா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது இவர்களை என்ன செய்வது..?

காசால் டாக்கடர் பட்டத்தை வேண்டலாம் ஆனால் அந்த டாக்டர் பட்டத்தால் தனக்குள்ள பணத்தை செலவிட முடியாத நோயைக்கூடக் குணப்பணத்த முடியாதென்பது எத்தனை பெரிய உண்மை.

பாவம் காசுக்கு டாக்டர் பட்டம் விற்கும் பல்கலைக்கழகங்கள்.. இப்படி எத்தனைபேருக்கு டாக்டர் பட்டங்கள் வழங்கிவிட்டன, மகிந்தவோடு இந்த பாவப்பட்ட பல்கலைக்கழகங்களையும் பார்த்து காலம் ஏளனமாகச் சிரிக்கிறது.

ஒண்ணுந்தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே – அவனை
மனித கூட்டம் புகழ்ந்து வாழ நாளும் தப்பாது..
என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை
மனித கூட்டம் மனிதனாக மதிக்க மாட்டாது..

அலைகள் தென்னாசிய விவகார பார்வைக்காக..

கி.செ.துரை

via visarnews

What do you think?

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%