, ,

தரையிலிருந்து விண்ணில் செலுத்தப்படும் ஏவுகணையால் வீழ்த்தப்பட்டது மலேசிய விமானம்- அமெரிக்கா

உக்ரைன் எல்லைப் பகுதியில் வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்க பயன்படுத்தப்படும் ஏவுகணையால் தாக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில், அந்த விமானத்தில் மொத்தம் 298 பேர் இருந்துள்ளனர். இவர்களில் 154 பேர் நெதர்லாந்து நாட்டவர்கள் ஆவர். உக்ரைனின் கிழக்குப் பகுதியில், ரஷ்ய எல்லைக்கு அருகே இந்த விபத்து நடந்துள்ளது. நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாமின் ஷிபோல் விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் கிளம்பிய விமானம் இது.

malaysian-airlines mh17

விபத்தில் உயிரிழந்தவர்களில் 27 ஆஸ்திரேலியர்களும் அடங்குவர் என்று மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது போக 23 பேர் மலேசியர்கள், 11 பேர் இந்தோனேசியர்கள், 6 பேர் இங்கிலாந்து நாட்டவர், நால்வர் ஜெர்மனியர்கள், 4 பேர் பெல்ஜியம் நாடடவர், 3 பேர் பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர்கள். ஒருவர் கனடியர்.

இதற்கிடையே, விமானம் தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கப் பயன்படுத்தப்படும் ஏவுகணையால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து விரிவான விசாரணை தொடங்கியுள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன், ரஷ்ய அதிபர் புடின் அவசர ஆலோசனையும் நடத்தியுள்ளார்.