, ,

இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டதில் மகிழ்ச்சியே: கெவின் பீட்டர்சன்

இங்கிலாந்து அணியிலிருந்து நீக்கப்பட்டது தனக்கு உண்மையில் நிம்மதியை அளிக்கிறது என்று கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

பிரபல பத்திரிக்கை ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது, நான் இல்லாமல் இங்கிலாந்து அணி வரும் வியாழக்கிழமை டெஸ்ட் போட்டியில் களமிறங்குவது குறித்து எனக்கு கோபமோ, வருத்தமோ, எதிர்மறை எண்ணங்களோ எதுவும் இல்லை.

நான் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு சுழற்பந்து வீச்சாளராக, என் வாழ்க்கை எங்கு செல்லும் என்று தெரியாமல் தொடங்கினேன்.

இதை தொடர்ந்து, இங்கிலாந்துக்குச் செல்லலாம் என்று எண்ணினேன், ஆனாலும் எனது முயற்சியில் நான் வெற்றி அடைவேனா என்பது சந்தேகமாகவே இருந்தது.

இப்போது நான் 104 போட்டிகளில் ஆடியுள்ளேன், உலகின் அனைத்து மைதானங்களிலும் ஆடியது என் அதிஷ்டம் என்றுதான் கூறவேண்டும்.

இனிமேல் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவேனா என்றால் நிச்சயம் ஆடுவேன், ஆனால் தற்போது இங்கிலாந்து அணி இறங்கும்போது நான் இல்லையே என்று நினைத்தால் பொறாமையும், எதிர்மறை எண்ணங்களுமே தலைதூக்கும்.

ஆனால், இங்கிலாந்து அணி என்னை நீக்கியதிலிருந்து என் மனம் வெகுதூரம் கடந்து வந்து விட்டது.

Kevin Pietersen 2

நான் இதுவரை 13,500 ஓட்டங்கள் அடித்திருக்கிறேன், இதற்கு மேல் ஆசைப்படுவது பேராசையே, ஆகவே நான் எனக்கு கொடுக்கப்பட்டதுடன் ஒத்துப்போக விரும்புகிறேன்.

மேலும், அவுஸ்திரேலியாவில் இங்கிலாந்து வீரர்கள் அறை மகிழ்ச்சியாக இல்லை.

இதை நான் மட்டும் கூறவில்லை ஆஷஸ் தோல்விக்கு பிறகு மனம் திறந்து இதையே அணியின் சில நண்பர்களும் தெரிவித்தனர்.

அதன் பிறகு ஆண்டி பிளவர் நான் அணியில் இருப்பதை விரும்பவில்லை என்பதை அறிந்து கொண்டேன்.

தொடரை 5-0 என்று இழந்த அன்று இரவு நாங்கள் அனைவரும் மது அருந்தினோம், ஆகவே வீரர்களிடையே எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

ஆஷஸ் தொடரில் எனது துடுப்பாட்டத்தை பற்றிக் கூறவேண்டுமெனில் நான் என் பாணியில் ஆடுவேன், இனியும் அப்படித்தான் ஆடுவேன்.

மும்பையில் 2012ம் ஆண்டு 186 ஓட்டங்கள் எடுத்தபோது அயல்நாட்டு வீரர் ஒருவரின் சிறந்த இன்னிங்ஸ் என்று கூறப்பட்டது.

நான் இன்னும் கொஞ்சம் தடுத்தாடி எனது கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டியிருக்கலாம். என்னை அது இன்னும் சிறந்த வீரராக மாற்றியிருக்குமோ? இல்லை.

மேலும், நான் துணிச்சலான முடிவெடுக்கும் ஒரு துடுப்பாட்டக்காரன் மட்டுமல்ல, வாழ்க்கையில் துணிச்சலான முடிவுகள் எடுப்பதும் எனக்குப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.