, ,

கடத்திய சிறுமியுடன் ரஜினி, அமிதாப் வீடு என ஊர் சுற்றிய கொலையாளி கைது

பெண் நிர்வாகியையும் அவரது உறவினரையும் வெட்டிக் கொன்ற கார் ஓட்டுநர், அந்த வீட்டில் இருந்து கடத்தப்பட்ட சிறுமிக்கு சச்சின், அமிதாப் வீடு முதல் ரஜினி வீடு வரை சுற்றிக்காட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பழனி அருகே பாலசமுத்திரத்தைச் சேர்ந்த தனுஷ்ஸ்ரீ, கடந்த மார்ச் 22ம் திகதி உறவினர் செந்தில்குமாருடன் வீட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

அவரது வீட்டில் வேலை பார்த்த, கார் ஓட்டுநரான திருப்பூர் மங்கலப்பட்டியைச் சேர்ந்த காளீஸ்வரன் என்பவர், இருவரையும் வெட்டிக் கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த ரூ. 23 லட்சத்துடன் தனுஷ்ஸ்ரீயின் மகள் துளசி சியாமளாவையும் கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 3 மாதமாக சிறுமி துளசி சியாமளாவுடன் தலைமறைவாக இருந்த காளீஸ்வரனை ஞாயிற்றுக் கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து தனிப்படை பொலிஸ் அதிகாரிகள் கூறுகையில், தனுஷ்ஸ்ரீ வீட்டில் காளீஸ்வரன் 4 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார்.

தனுஷ்ஸ்ரீக்கு உதவியாக வீட்டுப் பணிகள் முதல், பள்ளி, வங்கி வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்துள்ளார்.

மேலும், அவரது மகள் துளசி சியாமளாவையும் தினசரி காரில் பள்ளிக்குக் கொண்டுபோய் விட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் தனுஷ்ஸ்ரீக்கு உதவியாக, அவரது உறவினர் செந்தில்குமார் அவரது வீட்டுக்கு அடிக்கடி வந்துள்ளார்.

இந்நிலையில், செந்தில்குமாருக்கு காளீஸ்வரனை பிடிக்காததால், தனுஷ்ஸ்ரீ காளீஸ்வரனை கடந்த மார்ச் மாதத்துடன் வேலையைவிட்டு நின்று கொள்ளும்படி கூறியுள்ளார்.

அதனால் தனுஷ்ஸ்ரீ மற்றும் அவரது உறவினர் செந்தில்குமார் மீது காளீஸ்வரன் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

கடந்த மார்ச் 21ம் திகதி தனுஷ்ஸ்ரீ, தனது உறவினர் செந்தில்குமாருடன் சென்று வங்கியில் ரூ. 23 லட்சத்தை எடுத்ததை பார்த்த காளீஸ்வரன், அன்று இரவே தனுஷ்ஸ்ரீயையும் செந்தில்குமாரையும் தூங்கிக் கொண்டிருந்தபோது வெட்டிக் கொலை செய்துள்ளார்.

பின்னர் வீட்டில் இருந்த ரூ. 23 லட்சத்தை எடுத்துக்கொண்டு, மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த துளசி சியாமளாவை காரில் கடத்திச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, கொள்ளையடித்த பணத்தில் ரூ. 17 லட்சத்தை ஊட்டியில் உள்ள சகோதரி வீட்டில் கொடுத்துவிட்டு, மீதி பணத்துடன் துளசி சியாமளாவையும் அழைத்துக் கொண்டு கடந்த 3 மாதமாக குமரி முதல் காஷ்மீர் வரை காளீஸ்வரன் சுற்றிக் காட்டியுள்ளார்.

தாஜ்மகால், அமிர்தசரஸ் பொற்கோவில், ஆக்ரா கோட்டை, இந்தியா – பாகிஸ்தான் வாகா எல்லை, ஷீரடி சாய்பாபா கோயில் ஆகிய இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

மேலும், மும்பையில் சச்சின் டெண்டுல்கர், அமிதாப்பச்சன் வீடுகளையும், சென்னையில் ரஜினிகாந்த் வீட்டையும் சுற்றி காட்டியுள்ளார்.

கடந்த சில நாள்களாக இருவரும் சென்னையில் தங்கி இருந்தபோது, காளீஸ்வரன், ஊட்டியில் உள்ள தனது சகோதரியிடம் செல்போனில் பேசியதை வைத்து, அவர்கள் சென்னையில் இருப்பதை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் கோவைக்கு வந்தபோது, காளீஸ்வரனையும், சிறுமியையும் கோவை பேருந்து நிலையத்தில் வைத்து பிடித்தோம் என்று தெரிவித்துள்ளனர்.