, ,

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது-மத்திய அரசு: இந்தியாவுக்கே சொந்தமானது

katchatheevu-3

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்று மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது என்று நாடாளுமன்றத்தில் திமுக, அதிமுக, பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கருத்துத் தெரிவித்துள்ளன.

இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவை கடந்த 1974ம் ஆண்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தின்படி, தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்கு செல்லவும், அங்கு அவர்கள் மீன்பிடி வலைகளை உலர்த்திக் கொள்ளவும் உரிமை உள்ளது.

ஆனால், கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்படுகின்றனர். இதனால் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழக மீனவர்களும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. ஆனால், இந்த விஷயத்தில் மத்திய அரசு பெரும் அலட்சியத்துடன் நடந்து வருகிறது.

இந் நிலையில், கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், இந்தியா-இலங்கை கடல் பகுதியில் சர்வதேச எல்லைக் கோட்டை நிர்ணயித்த போது, கச்சத்தீவு இலங்கை வரம்புக்குள் சென்றுவிட்டதால் அது அந்த நாட்டுக்கே சொந்தமாகி விட்டது என்றும், கச்சத்தீவை சுற்றியுள்ள கடல் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை தமிழகத்துக்கு கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது.

1974ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி என்பதை இந்தியா ஏற்றுக் கொண்டு இருப்பதாகவும், எனவே அதை திரும்பப் பெறமுடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்டது. அதிமுக எம்பி மைத்ரேயன் பேசுகையில், கச்சத்தீவு பிரச்சனை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

நாட்டில் ஜமீன்தார் ஆட்சி முறை நடப்பதாக கருதும் காங்கிரஸ் கட்சி, தமிழக மீனவர்களின் நலனுக்கு எதிராக செயல்படுகிறது. எனவே அந்த கட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார். திமுக எம்பி கனிமொழி பேசுகையில், கச்சத்தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்களை சுட்டிக்காட்டினார். மேலும் இந்தியாவுக்கு சொந்தமான அந்த தீவை மீட்க வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி உள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் 194 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றுள்ளது. தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த 20 மாதங்களாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமையை மத்திய அரசு நிலைநாட்ட வேண்டும் என்றார். இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. டி.ராஜா பேசுகையில், மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இலங்கை அரசுடன் இந்தியா மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றார். இந்தப் பிரச்சனையில் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு ஆதரவாக பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடுவும் பேசினார்.

கச்சத்தீவு பிரச்சினை பற்றி விவாதிக்க மத்திய அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தை திரும்ப பெற வேண்டும் என்றார். காங்கிரஸ் எம்பியான மணிசங்கர் அய்யர் பேசுகையில், கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் திருத்தங்களை அமல்படுத்த வேண்டும் என்றார்.