,

எனக்குப் பிரியமானவர்களுக்குப் பாரமாக இருக்க மாட்டேன், உயிர் துறப்பேன்.. ஹாக்கிங் உருக்கமான பேச்சு

எப்போது எனக்குப் பிரியமானவர்களுக்கு நான் பாரமாக மாறுகிறேனோ, அப்போது மற்றவர்களின் உதவியுடன் எனது வாழ்க்கையை முடித்துக் கொள்வேன் என்று பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் உருக்கமாக கூறியுள்ளார்.

அவரது இந்தப் பேச்சு ஹாக்கிங்கை நேசிக்கும் ஒவ்வொருவரையும் கண்ணீர் விட வைத்துள்ளது. விஞ்ஞான உலகம் கண்ட வியப்பான மனிதர் ஹாக்கிங். உலகப் புகழ் பெற்ற இயற்பியலாளரான ஹாக்கிங், இந்த பிரபஞ்சத்தின் பிறப்பு குறித்து கூறியுள்ள கருத்துக்கள், எழுதிய நூல்கள், பெரும் பிரபலமானவை.

மோட்டார் நியூரான் நோயால் நீண்ட நெடுங்காலமாக சக்கர நாற்காலியுடன் முடங்கிப் போய் விட்டாலும் கூட ஹாக்கிங் இன்னும் உயிர்ப்புடன் இந்த உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார் – தனது அபாரமான பிரபஞ்ச பிறப்பு குறித்த கருத்துக்களால்.

stephen-hawking

தற்போது 73 வயதாகும் ஹாக்கிங், தனது மரணம் குறித்துப் பேசியுள்ளார். இது அனைவரையும் உருக வைத்துள்ளது. நீண்ட காலமாகவே, தன்னைத் தானே மாய்த்துக் கொள்ள (தற்கொலை) மனிதர்களுக்கு உரிமை உள்ளது என்று கூறி வருபவர் ஹாக்கிங். தற்போது தனது மரணம் குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், உடல் ரீதியாக முற்றிலும் செயலிழந்து போகும் ஒருவருக்கு தன்னைத் தானே மாய்த்துக் கொள்ள மற்றவர்கள் உதவ வேண்டும். அந்த உரிமையை மறுப்பது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.

நாளை எனக்கு வலி மிகுந்தால், என்னுடைய அன்புக்குரியவர்களுக்கு நான் பாரமாக மாறினால், நிச்சயம் அந்த பாரத்தை நான் அனுமதிக்க மாட்டேன். என்னை மாய்த்துக் கொள்ளவே முடிவு செய்வேன். மற்றவர்கள் எனக்கு அப்போது உதவ வேண்டும். என்னால் யாருக்கும் எந்தப் பலனும் இல்லை என்ற நிலை வரும்போது தொடர்ந்து உயிரோடு இருப்பதால் யாருக்கும் பயன் கிடையாது. அதை ஏற்க முடியாது.

என்னால் யாருக்கும் எந்தப் பலனும் இல்லை என்ற நிலை வரும்போது தொடர்ந்து உயிரோடு இருப்பதால் யாருக்கும் பயன் கிடையாது. அதை ஏற்க முடியாது.

இப்போது எனது மரணத்தை மெது மெதுவாக தொடங்கும் திட்டம் என்னிடம் இல்லை. இன்னும் பிரபஞ்சம் தொடர்பாக பல விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதற்குள் நான் சாக மாட்டேன் என்றே கருதுகிறேன் என்றார் ஹாக்கிங்.

மேலும் அவர் கூறுகையில், எனது குழந்தைகள் சிறார்களாக இருந்தபோது அவர்களுடன் ஓடியாட முடியாமல் போனதுதான் எனக்கு இன்னும் வருத்தமாக உள்ளது. நான் அந்த விளையாட்டுத் தனத்தை இழந்து விட்டேன்.

இப்போதெல்லாம் பல நேரங்களில் நான் தனிமையில் உள்ளதைப் போல உணரும் நிலை ஏற்படுகிறது. எனது உடல் நிலையும் அதற்கு ஒரு காரணம். சில நேரங்களில் பலர் என்னுடன் பேச பயப்படுகின்றனர். அல்லது நான் பதில் தருவதற்காக காத்திருப்பதற்கு அவர்களுக்குப் பொறுமை இருப்பதில்லை.

இதனால் நான் பல நேரங்களில் சோர்வடைந்து விடுகிறேன். எனக்கு சிறு வயதில் இருந்ததைப் போல நீச்சலடிக்க வேண்டும் என்ற ஆசை இப்போதும் இருக்கிறது. ஆனால் முடியாதே… என்று கூறியுள்ளார் ஹாக்கிங்.

பிபிசி1 சானலில் ஜூன் 15ம் தேதி இந்த பேட்டி ஒளிபரப்பாகவுள்ளது. இந்தப் பேட்டியில் ஹாக்கிங்கின் 45 வயது மகள் லூசி, 36 வயது மகன் டிம் ஆகியோரும் கலந்து கொண்டு பேட்டி அளிக்கின்றனர்.

ஹாக்கிங்கின் 21வது பிறந்த நாளுக்குப் பின்னர்தான் அவருக்கு இந்த நரம்பியல் வியாதி கண்டுபிடிக்கப்பட்டது. அவரால் 2 ஆண்டுகளுக்கு மேல் உயிருடன் இருக்க முடியாது என்று அப்போது டாக்டர்கள் கூறியிருந்தனர். ஆனால் அதைத் தாண்டி இன்று வரை உயிர்ப்புடன் இருந்து வருகிறார் ஹாக்கிங் என்பது குறிப்பிடத்தக்கது.