in , ,

மேற்கிந்திய தீவுகள் இறுதிச்சுற்றுக்கு நுழைந்தது

அவுஸ்திரேலியாவை விழ்த்தி மேற்கிந்திய தீவுகள் இறுதிச்சுற்றுக்கு நுழைந்தது. டி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய அரையிறுதி போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 74 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் மேற்கிந்திய தீவுகள்- அவுஸ்திரேலிய அணிகள் மோதின.

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய சார்லஸ் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கெய்ல் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் அரைசதம் கடந்து 75 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்பு களமிறங்கிய சாமுவேல்ஸ் 26 ஓட்டங்களும், டிவைன் பிராவோ 37 ஓட்டங்களும், பொல்லார்டு 38 ஓட்டங்களும் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்கள் எடுத்தது.

இதையடுத்து 206 என்ற கடின இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, மேற்கிந்திய தீவுகள் அணியினரின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இறுதியில் 20 பந்துகள் மீதம் உள்ள நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியடைந்தது. அதிகபட்சமாக அணித்தலைவர் பெய்லி 63 ஓட்டங்களும், ஹஸ்சி 18 ஓட்டங்களும், கம்மின்ஸ் 13 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக ராம்பால் 3 விக்கெட்டுகளும், பத்ரீ, நரைன், பொல்லார்டு ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக மேற்கிந்திய திவுகளின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவானார். வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை, மேற்கிந்திய தீவுகள் எதிர்கொள்ளவுள்ளது.