, ,

பல ஆண்களை திருமணம் செய்து மோசடி: கல்யாண ‘ராணி’க்கு போலீஸ் வலை

கேரள மாநிலம் கோட்டயம் அருகே குளிமற்றம் பகுதியை சேர்ந்தவர் சசீந்திரன் (47). ஆட்டோ டிரைவர். இவர் திருமணம் செய்வதில் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். இவரது நண்பர்கள் தொடர்ந்து வற்புறுத்தி திருமணம் செய்ய சம்மதிக்க வைத்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன் மணமகள் தேவை என விளம்பரம் செய்தார்.

இந்நிலையில் சசீந்திரனின் செல்போனுக்கு எர்ணாகுளத்தில் இருந்து பேசுவதாக கூறி ஒருவர் தொடர்பு கொண்டார். அவர், தனக்கு கணவனை இழந்த தங்கை இருப்பதாகவும், அவரது பெயர் சாலினி (29) என்றும், அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக இருப்பதாகவும் கூறி உள்ளார்.

சாலினி, தனது தகுதிக்கு மீறிய பெண் என்பதால் அந்த பெண் வேண்டாம் என சசீந்திரன் கூறியுள்ளார். மறுநாள் சாலினியே போன் செய்து தன்னை நேசிக்கும் சாதாரண ஒருவர் தான் தனக்கு கணவராக வரவேண்டும் என விரும்புவதாகவும், எனவே திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறினார்.

இதனால் சசீந்திரன் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். பின்னர் சசீந்திரனிடம் பேசிய சாலினி, ஆட்டோ டிரைவரை திருமணம் செய்ய எனது அண்ணனுக்கு விருப்பம் இல்லை. எனவே நமது திருமணத்தை ரகசியமாக வைத்துக் கொள்ளலாம் என கூறி உள்ளார். இதை நம்பிய சசீந்திரன் அங்குள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.2 லட்சம் கடன் வாங்கி திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

கடந்த 5ம் தேதி ஆலப்புழா அருகே உள்ள ஒரு கோயிலில் வைத்து திருமணம் நடந்தது. திருமணத்தின்போது சாலினிக்கு 5 பவுனில் தாலி செயின் அணிவித்துள்ளார் சசீந்திரன். மாலையில் மணமக்கள் இருவரும் ஆலப்புழா கடற்கரைக்கு சென்றனர். சிறிது நேரத்திற்கு பின் சாலினி, தனக்கு ஆலப்புழா காவல் நிலையத்தில் ஒரு வழக்கு தொடர்பான பணி உள்ளது.

போய்விட்டு உடனடியாக வந்துவிடுவேன் என கூறி ஆட்டோவில் சென்றுள்ளார். ஆனால் 7 மணியான பின்னரும் அவர் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சசீந்திரன் காவல் நிலையத்துக்கு சென்று விசாரித்த போது அப்படி யாரும் இங்கு வரவில்லை என கூறினர். பின்னர் சசீந்திரன் தனது வீட்டுக்கு சென்று பார்த்த போது வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தையும் காணவில்லை. இது குறித்து அவர் கோட்டயம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. சாலினி இதைப் போல் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்துள்ளது தெரிய வந்தது. இதைப்போல் திருமண மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டு ஆலப்புழா மற்றும் திருவனந்தபுரம் சிறையிலும் இருந்துள்ளார். சசீந்திரனை ஏமாற்றிய வழக்கில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.